திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஆறாம் திருமுறை |
6.21 திருஆக்கூர் - திருத்தாண்டகம் |
முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகுந் தாமாகி நின்றார் போலும்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங்
கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்
குற்றவேல் தாம்மகிழ்ந்த குழகர் போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே.
|
1 |
ஓதிற் றொருநூலு மில்லை போலும்
உணரப் படாதொன் றில்லை போலும்
காதிற்குழை யிலங்கப் பெய்தார் போலுங்
கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலுங்
வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்
ஆதிக் களவாகி நின்றார் போலுங்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே.
|
2 |
மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
நெய்யார் திரிசூலங் கையார் போலும்
நீறேறு தோளெட் டுடையார் போலும்
வையார் மழுவாட் படையார் போலும்
வளர்ஞாயி றன்ன ஒளியார் போலும்
ஐவா யரவமொன் றார்த்தார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே.
|
3 |
வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
பூங்கங்கை தோய்ந்த சடையார் போலும்
கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும்
கட்டங்க மேந்திய கையார் போலும்
அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே.
|
4 |
ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
இடுவெண் டலைகலனா ஏந்தி நாளும்
மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை
புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்
மாகாச மாயவெண் ணீருந் தீயும்
மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாச மென்றிவையு மானார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே.
|
5 |
மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள்
மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைக ளானார் போலும்
முதலு மிறுதியு மில்லார் போலும்
தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்
திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே.
|
6 |
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்
மான்றோ லுடையா மகிழ்ந்தார் போலும்
கோலானைக் கோவழலாற் காய்ந்தார் போலுங்
குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்
காலனைக் காலாற் கடந்தார் போலுங்
கயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும்
ஆலானைந் தாட லுகப்பார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே.
|
7 |
கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்
ஊழித்தீ யன்ன ஒளியார் போலும்
எண்ணா மிரங்கோடி பேரார் போலும்
ஏறேறிச் செல்லு மிறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே.
|
8 |
கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
நெடியானுஞ் சதுர்முகனுந் நேட நின்ற
நீலநற் கண்டத் திறையார் போலும்
படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி
மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும்
அடியார் புகலிடம் தானார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே.
|
9 |
திரையானுஞ் செந்தா மரைமே லானுந்
தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்
புரையா னெனப்படுவார் தாமே போலும்
போரேறு தாமேறிச் செல்வார் போலும்
கரையா வரைவில்லே நாகம் நாணாக்
காலத்தீ யன்ன கனலார் போலும்
வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |